எழுதாத பேனா

ஆனா என்ன வேணும்னாலும் எழுதும் ...ஜாக்கிரதை

Thursday 18 July 2013

அவனதிகாரம்


அவனதிகாரம்

July–2-2013 
கணிப்பொறியில் நேரம் 9.00PM என்று காட்டியது . AC கள் அணைக்கப்பட்ட அலுவலக இரவில், உதிரும் வியர்வையுடன், என் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தேன்.
கூகுளாண்டவரிடம் “குவா … குவா.. ” என்ற  சத்ததிற்கான அர்த்தத்தை கேட்டுக் கொண்டிருந்தேன். அவரால் தெளிவாக விளக்கம் குடுக்க முடியவில்லை.என் ஆராய்ச்சிக்கு அவரது உதவி அதிகம் தேவைப்படாது என்று முடிவு செய்து, கடையை சாத்தினேன் logged off from my system.
கடந்த சில மாதங்களாகவே ,இந்த சத்தத்தின் அர்த்தம் தேடிக் கொண்டிருக்கிறேன்.ஏகப்பட்ட புத்தகங்கள் தொடங்கி, சித்தர் சுவடிகள் வரை தேடியாகி விட்டது. முடிவு கிடைக்க வில்லை. இதோ இப்போது அங்கிள் கூகுல் லும் கை விரித்து விட்டார்.
—***—
நான் வீட்டை அடைந்த போது நேரம் , இரவு பதினொன்று .
“டாக்டர் கிட்ட போயிட்டு வந்தோம் பா , எப்படியும் அடுத்த வாரம் பிரசவம் ஆயிடும்னு சொல்றாங்க ” என்று சொன்ன என் அம்மா வை பார்த்து லேசாய் சிரித்து  விட்டு உள்ளே சென்றேன் .
“என்னங்க , பயமாயிருக்கு …” என்றாள் என் மனைவி.
காதலித்த நாள் முதல் , இன்று கரு சுமக்கும் நாள் வரை அவளது favorite டயலாக் “என்னங்க , பயமாயிருக்கு …” .
அதற்கு எப்போதும் என் பதில் ” பயப்படாதேமா , நான் பாத்துக்கறேன் ” என்று அவள் கைகளைப் பற்றிக்கொள்வது .
பற்றிக்கொள்ளும் போது ,அவள் பயம் அத்தனையும் என்னுள் கடத்தி விடுவதில் அவள்   கெட்டிக்காரி.
—***—
தூக்கம் என்னை தழுவ மறுத்த அந்த நள்ளிரவு வேளையில் , ஏதேதோ பயங்களும் ,சந்தேகங்களும் என்னை அழுத்தக் காத்துக் கொண்டிருந்தது.
அவைகளோடு சண்டையிட்டு நான் எப்போது தூங்கிப் போனேன் என்று தெரியவில்லை .
—***—
July-3-2013
யாரோ என்னை பட பட வென அடிப்பது தெரிந்து விழித்தேன். வயிற்றை பிடித்துக்கொண்டு “அத்தையை கூப்பிடுங்க ” என்று கத்தினாள் என் மனைவி.
அதற்குள்ளாகவே என் அம்மாவும் வந்து விட்டார் .என்னை வெளியே இருக்கச் சொல்லிவிட்டு அறைக்குள் சென்றார் .
சில நிமிடங்களில் ,வெளியே வந்து ,”டாக்ஸி புக் பண்ணிடு,நான் டாக்டர் கிட்ட பேசிட்டேன் , உடனே கிளம்பனும் ” என்று முகத்தில் பதட்டம் தெரிந்தாலும் ,குரலில் காட்டமல் கூறினார்.
—***—
4:03 AM
சுவர் கடிகாரம் ,நான்கு மணியை தாண்டி சுற்றிக் கொண்டிருந்தது .என்னை ஒரு வித கலக்கமும்,பதை பதைப்பும் தொற்றிக் கொண்டது .
அவசர கதியில் டாக்ஸி க்கு சொல்லிவிட்டு, குழாயை திறந்தால் தண்ணீர் வரவில்லை.
அப்பார்ட்மெண்ட் வாழ்க்கையை நொந்துகொண்டேன்.
என் அவசரம் புரியாமல்,நொடி முள்  மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தது .
சரியாக பத்து நிமிடத்தில் கார் வந்தது. என் தாய் தந்தையுடன் ,ஏறக்குறைய மயக்க நிலையில் இருந்த என் மனைவியை ஏற்றிவிட்டு  என் பைக் கில் பின் தொடர்ந்தேன்.
அது வரை அறுபதையே பார்த்திராத என் பைக் , தொண்ணூறைத் தொட்டது. கூட்டமில்லாத அதிகாலை சாலை என் வேகத்தை இன்னும் அதிகரித்தது.முகத்தில் மோதும் பனி காற்றையும் மீறி வியர்வை வழிந்தது.
—***—
4:45 AM
எழுபதுக்கு குறையாத வயதுடைய பெண் டாக்டர், கருப்பு நிற நைட்டியில் எங்களை எதிர் பார்த்து நின்றிருந்தார். என் மனைவியை மட்டும் பரிசோதனைக்கு உள்ளே அழைத்துச் சென்றார்.
வெளியே வந்து, என்னிடம்,” எப்படியும் இன்னைக்கு  பிரசவம் ஆயிடும், அட்மிட் பண்ணிடுங்க ” என்று சொல்லிவிட்டு , உதவிக்கு இருந்த நர்சிடம் ,புரியாத பாஷையில் ஏதோ சொல்லிவிட்டு சென்றார்.
 —***—
5:15 AM
காலை நேரம்,கொசுக்களின் ரீங்காரம்,பினாயில் வாசம்,மனைவியின் கண்ணீர் போன்ற வஸ்துக்கள் என்னை வதைதுக் கொண்டிருந்தது.
“ட்ரிப்ஸ் போடணும், சலைன் குடுக்கணும், பெயின் இண்ட்யூஸ் பண்ணனும் “,அப்படி இப்படி என்று பல விஷயங்களுக்கு என்னிடம் அனுமதி கேட்டார்கள்.
எல்லாவற்றிற்கும் நான் அமோதிப்பது போல் தலையசைத்துக் கொண்டிருந்தேன் .
—***—
7:00 AM
டாக்டர் சேலைக்கு மாறியிருந்தார் . என்னை வெளியே தள்ளிவிட்டு பரிசோதனை செய்ய ஆரம்பித்தார்.
வெளியே வந்து ,என்னிடம் உதட்டை பிதுக்கிகொண்டு “நார்மல் வாய்பில்ல ,சிசேரியன் தான் ட்ரை பண்ணனும் , என்ன சொல்றிங்க?” என்றர்.
“எதுவானாலும் , தாயும் புள்ளையும் நல்லபடியா இருக்கணும் டாக்டர் ” என்று நானும் என் தாயும் ஒரே ஸ்ருதியில் சொன்னோம்.
“முடிஞ்ச அளவு ட்ரை பண்றோம்.மெம்ப்ரேன் ரப்ச்சர் ஆயிருக்கு,பேபி பொசிஷன் ல இல்ல ” என்று இன்னும் புரியாத மருத்துவ வார்த்தைகளை துணைக்கு கொண்டு வந்து என்னை சமாளித்தார்.
 என் கை கால்கள் அசைவில்லாமல் நின்றது .என் அம்மா கண்ணீரை மறைத்துக் கொண்டு என் முதுகை தட்டிக் கொடுத்தார். அவராலும் ஏதும் பேச முடியவில்லை.
சற்றே வயது கூடிய நர்ஸ் ஒருவர்,”நீங்க தான் தைரியமா இருக்கணும்,உங்க வைப் கிட்ட எதையும் காமிச்சுக்காதிங்க ” என்று என் ரத்த அழுத்தத்தை கூட்டினார்.
“நீங்களும் என் கிட்ட எதுவும் காமிச்சுக்காதிங்க ” என்றேன் நான்.
அறையின் உள்ளே ,மருத்துவமனையின் ரப்பர் ஷீட் போர்த்தப் பட்ட படுக்கையில் படுத்திருந்தாள்.அருகில் அமர்ந்து கொண்டேன்.
அருகில் ,ரிஷப்ஷனில் ,நர்ஸ்கள் மாறி மாறி யார் யாருக்கோ போன் செய்து கொண்டிருந்தார்கள்.
—***—
7:45 AM
என் மனைவி அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள்.தொங்க விடப்பட்டிருந்த சலைன் பாட்டிலின் ஒவ்வொரு சொட்டும் ,என் இதயத் துடிப்போடு துடித்து ,விழுந்தது.
வெளியே !!
“டாக்டர்,சிசேரியன்  கேஸ் ஒன்னு , கொஞ்சம் வரமுடியுமா ?” போனில் நர்ஸ்  
மறுமுனையின் பதிலுக்குப் பின்
“ஓ ! அப்படியா …சரிங்க டாக்டர் ” என்றாள் அந்த நர்ஸ் .
“டப்” போன் வைக்கப் பட்டது.
அடுத்தடுத்து வேறு வேறு டாக்டர்களுக்கு போன் போய் கொண்டிருந்தது.
நேரம் ஆக ஆக , வெறும் கேஸ் என்பது , அர்ஜெண்ட் ,சீரியஸ் என்று மாறிக் கொண்டே போனது.
அது எதுவும் என் மனைவியின் காதுகளுக்குள் விழக்கூடாது என்பதில் நான் சர்வ ஜாக்கிரதையாய் இருந்தேன்.
அனால் , சட்டென என் கைகளைப் பிடித்துக்கொண்டாள்.இம்முறை கண்ணீரையும் சேர்த்து என்னுள் கடத்திவிட்டாள்.
—***—
8:45 AM
“ஆபரேஷன் தியேட்டர் க்கு கூட்டிட்டு வாங்க ,எல்லாம் ரெடி ஆயாச்சு ” என்று நர்ஸ் கூறிவிட்டு சென்றார்.
படிக்காத பரீட்சைக்கு செல்லும் மழலை போல் ,திரு திரு வென விழித்தாள் என்னவள்.அவளை சமாதானம் செய்து ,நெற்றியில் விபுதி கீற்று ஒன்றை இட்டு விட்டார் என் அம்மா.
அவளை சக்கர நாற்காலியில் வைத்து  தியேட்டர் க்கு ,அழைத்துச் சென்றேன்.
வழியில் ஒரு கருப்பு பூனை ,குறுக்கே பாய்வதற்கு தயாராய் இருந்தது. இது வரை சகுனத்தில் நம்பிக்கை இல்லாத நான் ,முதல் முறையாக பதறிக் கொண்டு கடவுளை வேண்டினேன்.
என் வேண்டுகோள் கடவுளை அடையும் முன் அந்த பூனையின் செவிகளை அடைந்து விட்டது போல.புரிந்தது போல் தலையை அந்தப்பக்கம் திருப்பிக் கொண்டது.
 சக்கர நாற்காலியின் கிரீச் கிரீச்  சத்தம் நின்றது ;அவள் கன்னத்தில் வழிந்த கண்ணீரை துடைத்து விட்டு அவளை உள்ளே அனுப்பினேன். இருவருக்கும் கைகள் நடுங்கிய தருணம் அது.
—***—
9:00 AM
நொடிகள் நிமிடங்களாய் மாற மறுத்தது.
இதுவரை நான் சந்தித்த சவால்கள் அணைத்தும் ,இந்த நொடியில் சாதாரனமாய் தெரிந்தது.டாக்டர்களும் நர்ஸ்களும் பரபரப்பாய் இயங்கிக் கொண்டிருந்தார்கள். வயதான பாட்டி ஒருத்தியும் அவர்களுக்கு உதவியாய் உள்ளே இருந்தாள்.
சரியாக இரண்டு நிமிடத்திற்கு ஒருமுறை ,கருப்பு நிற பிளாஸ்டிக் பையில் எதையோ கொண்டு வந்து கொட்டிகொண்டிருந்தாள் அந்த பாட்டி.
பழைய படங்களில் வரும் திகில் கிழவிகளின் சாயலில் இருந்தாள் அந்த பாட்டி.
—***—
9:05 AM
கண்ணை துடைத்துக் கொண்டு ,என் அம்மா என்னை பார்த்து,”நீ பிறந்தபோது கூட நான் இவ்ளோ டென்ஷன் ஆகல ” என்றார்.
கண்களை இருக்க மூடிக்கொண்டு ,கைகளை மார்புக்கு குறுக்கே கட்டிக்கொண்டு பிரார்த்தைனையில் ஈடுபட்டிருந்தார் என் தந்தை.
இது வரை, அந்த நிலையை, ஏதோ ஒரு யோசனை என்று எண்ணிக் கொண்டிருந்த எனக்கு, இன்று தான் அது பிரார்த்தைனை என்று புரிந்தது.
அப்பா ஆகும் தருணத்தில் தான் ,அப்பா வின் வலிகள் புரிகிறது.
—***—
9:10 AM
சினிமாவில் காட்டுவது போல் அந்த வராண்டாவை என் கால்களால் அளந்து கொண்டிருந்தேன்.அவ்வபோது அந்த கிழவி ஒரு மர்ம பார்வை பார்த்து சென்று கொண்டிருந்தாள்.
என் முதுகெலும்பை யாரோ முறுக்குவது போல் உணர்ந்தேன்.இதை இதற்கு முன் இதை நான் அனுபவித்ததில்லை.
—***—
9:15 AM
அந்த திகில் கிழவி இம்முறை ,வேகமாக என்னை நோக்கி ஓடி வந்தாள்.
“ஆம்பள புள்ள பிறந்திருக்கு , தாயும் புள்ளையும் சுகமா இருக்காங்க “என்று கறைப் பற்கள் தெரிய சிரித்தாள்.
அந்த நொடியில் ஒரு தேவதையாய் மாறினால் அந்த திகில் கிழவி :)
—***—
9:20AM
பிங்க் நிற டவலில் ,என் குழந்தைய டாக்டர் தூக்கி வந்தார்.அருகிலேயே நகரும் கட்டிலில்,என் மனைவி புன்னகைத்தாள்.
 தரை தொடாத பாதத்தால் கன்னத்தில் உதை படுவது எத்தனை சுகம் “நான் அப்பா ஆயிட்டேன் ….”
“குவா …குவா…” – அந்த சத்தம் என்னை தட்டியது.
 தாயின் ஸ்பரிசம் போல் ;
மலரும் மலரின்  வாசம் போல்;
அதிகாலை பனியில் குளித்திருக்கும் அருகம்புல்லை கன்னத்தில் வருடினாற்போல்;
உடையும் மேகத்தின் முதல் துளியை ,நுனி நாக்கில் சுவைத்தார் போல் ;
இன்னும் சொல்ல முடியா எண்ணற்ற உணர்வுகள் என் செவி வழியே  சென்று ஐம்புலனிலும் கலந்து விட்டது.
என் உதிரத்தின் செல்கள் அந்த “குவா ..குவா…”சத்தத்தை எதிரொலித்தது.
எங்கள் காதலுக்கான ,கடவுளின் முத்தம் அந்த சத்தம் என்பது  எனக்கு மட்டும் புரிந்தது.
இந்த உணர்வை விஞ்ஞானத்தாலும் விவரிக்க முடியாது. அனுபவித்தால் மட்டுமே ஆனந்தம்.
 எதிர்பார்ப்புகள் அற்ற அந்த நொடியில் ,பெயர் தெரியாத கடவுள் முதல் ,பெயர் தெரிந்த என் மூதாதையர் வரை அனைவருக்கும் என் நன்றி தெரிவித்துக் கொண்டிருந்தேன்.
மறுபடியும் அந்த ஓசை ” குவா…குவா…”.
என் மகனை என் கையில் ஏந்திக்கொண்டேன். ரோஜா பாதங்களால் என்னை உதைத்து கண்கள் சிமிட்டி ,பொக்கை வாய் தெரிய ஒரு புன்னகை வீசினான்.
இனி எங்கள் வீட்டில் அவனதிகாரம்.
I am blessed with a baby boy on July 3rd 2013.

Tuesday 25 June 2013

பின்னூட்டங்களுக்கான பின்னூட்டம்

பின்னூட்டங்களுக்கான பின்னூட்டம்
இந்த பதிவு, என் முந்தைய பதிவிற்கு வந்த பின்னூட்டங்களுக்கான பின்னூட்டம்.

என் அலுவலகம் மட்டுமல்லாமல்,வேறு சில சமுக வலைத்தளங்களிலும், இந்த பதிவு பகிரப் பட்டதால்கிட்ட தட்ட 40 மின் அஞ்சல் ,10-15 அலுவலக ப்ளாக் கமெண்ட்ஸ்,40 க்கும் மேல் கூகுள் கமெண்ட்ஸ் என ,என் மெயில்-பாக்ஸ் நிரப்பியிருந்தது.
வந்த அஞ்சல்களில் சாத்வீக விமர்சனங்களை தவிர்த்து, எண்ணிக்கையில் அதிகமாய் வந்த விமர்சனங்கள் இந்த ஒற்றை வரியை குறி வைத்தே இருந்ததது.
"நேர்மையான காதலில் பெண்களுக்கு தானே இழப்புகள் அதிகம்"
சிலர் சிலாகித்தும் ,பலர் சாடியும், ஒன்றிரண்டு பேர் அதற்கான மெய்யான விளக்கத்தை கேட்டும் ,ஒருத்தர் தனி விவாதம் வேண்டும் என்றும் எழுதியிருந்தார்கள்.
திட்டிய அனைவரின் கருத்தும் ,"பொத்தாம் பொதுவாய் எழுதாதே " என்றே இருந்தது.
யோசிக்காமல் எழுதிவிட்டேனோ என்றுநான் சற்று பதறிவிட்டேன். அது பொத்தாம் பொதுவாய் எழுதப்பட வரியா? எதுகை மோனைக்காக அலங்கரிகப்பட்ட வரியா? இடத்தை நிரப்ப எழுதப்பட்ட ஒன்றா ?
எதுவும் இல்லை! என் பேனா முள்  அனிச்சை யாக தீட்டிய வரி அது.
அனிச்சை என்பது கண்ணில் தூசி விழும் முன் கண் இமைப்பது போல், ஜீனில் கலந்துவிட்ட ஒரு விஷயம்.
தலைமுறைகளை கடந்தும் அது கடத்தி வரப்பட்டிருக்கலாம்,அல்லது சமீபத்து நிகழ்வுகளின் பாதிப்பு காரணமாகவும்  இருக்கலாம்.
எனக்கு உண்டான அனிச்சை  இரண்டாம் வகையை சார்ந்தது.
இங்கே சமீபம் என்பது ஒரு வாரமோ, ஒரு வருடமோ அல்ல. பதின் பருவம் தொடங்கி, காதல் என்பது என்ன என நான் ஆராய்ச்சி செய்த நாள் முதல்,நான் சந்தித்த ,அனுபவங்களின் கோர்வையே அந்த சமீபம்.
 நிறம் ,மொழி ,இனம் பேதம்மில்லாதது காதல் என்றாலும் ,ஆண் பெண் என்ற பேதம் எபோதும் உண்டு . இந்த சமூகத்தில் ,ஒரு ஆண் தன்  காதல் தோல்வியை பகிரங்கமாய் படமெடுத்து காட்ட முடியும் ஆனால் ஒரு பெண்ணால் தன் அறை தோழியிடம் கூட பகிர முடியாது.
ஆட்டோகிராப்பும் தேவதாசும் சக்கை போடு போட்ட இந்த society எனப்படும்   சமூகத்தில் , காதல் தோல்வியை காரணம் காட்டி ஒரு ஆணால் கடைசிவரை திருமணம் என்னும் பந்தத்திற்குள் செல்லமலே வாழ முடியும். அதை ஊர் முழுக்க பிரசங்கம் செய்யவும் முடியும் .ஆனால் பெண் ஒருத்தி முப்பதை கடந்தும் தனியாக இருந்தால் , அதே சமூகம் அவளை கருப்புக்கண்ணாடி அணிந்து பார்க்க தொடங்கிவிடும்;இப்போதெல்லம் இருபத்தைந்தே அதிகம்.
இதையெல்லாம்  நினைக்கும் போது என் அனிச்சைக்கு காரணாமாய் இருந்த பல நிகழ்வுகள் ஒன்றன் பின் ஒன்றாக என் நினைவில் வந்து அம்ர்ந்துகொள்கிறது.
என் காதலி (இன்று என் மனைவி) பட்ட அவதிகள் தொடங்கி என் வாழ்வில் நான் பார்த்த பல பெண்களின் காதல் என் முன் வந்து போகிறது.ரத்திரியில் கேட்கும் மெலடி பாடல் போல் என் நினைவை சீண்டுகிறது.
பத்து ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம் இது.
நீ பயப்படதே மா..நாளைக்கே ரிஜிஸ்டர் மேரேஜ் பன்னிடலாம் டா, நீ உடனே சென்னைக்கு வந்திடு...” என்று கூப்பிட்ட காதாலன் அன்றிரவே ஒரு விபத்தில் மரணித்துவிட,அது தெரியாமல், சென்னைக்கு வந்த எங்கள் ஊர் பெண் ஒருத்தி ,ஒரு வார போராட்டதிற்கு பிறகு ஒரு கும்பலிடம் இருந்து மீட்க பட்டாள்.
அவள் நிலையை அறிந்து கவலை பட்டு பேசுவது போல் பாசாங்கு செய்த இந்த சமூகம் எனும் கூட்டம்,அந்த ஒரு வாரத்தில் என்ன நடந்திருக்கும் என்பதையே ஆர்வமுடன் யூகித்துக் கொண்டிருந்தது.
இது போல், என் தூரத்து சொந்தத்தில்,நெருங்கிய நண்பர் ஒருத்தரது வாழ்க்கயில் நடந்த சம்பவமும் என்னை புரட்டி போட்டது. அவருக்கு என்னைவிட அகவையில் ஐந்து அதிகம்.முன்னனி நிறுவனத்தில் நல்ல சம்பளத்தில் உத்யோகம்.நானும் என் நண்பனும் சென்னை வந்த புதிதில் அவரோடு அறையை பங்கிட்டு கொண்டிருந்தோம்.அவரது நடை உடை பேச்சு வைத்தே அவர் காதலில் தோற்றவர் என்று அறிந்து கொண்டோம்.அதிகம் பேச மாட்டர், சொந்தமாக வீடு வங்கியிருந்தும் தனிமை அச்சத்தால் எங்களோடே தங்கிவிட்டார்.குடி அவரது பொழுது போக்கு. ஒரு தீபாவளி சமயம், தி-நகர் தெருக்களில் எங்களோடு அவரும் சுற்றிக்கொண்டிருந்தார்.
சட்டென்று அந்த நெரிசலில் ஒரு பெண்ணை பார்த்ததும் மயங்கி விழுந்துவிட்டர். அதை பார்த்த அவளும் மயங்கி விட்டாள். அதன் பின் எங்களிடம் அவர் எதுவும் பகிர வில்லை. சரியாக இரண்டு நாளில் அவரது அம்மாவிடமிருந்து உடனடியாக ஊருக்கு வருமாறு ஒரு தொலைபேசி அழைப்பு.இரவோடு இரவாக நாங்கள் காரில் பயணமானோம்.விடியும் நொடியில் எங்கள் ஊரை அடைந்தோம்.தெரு முனையிலேயே அவரது தகப்பனார் நின்றிருந்தார். காரில் ஏரிக்கொண்டு வேரு ஒரு முகவரிக்கு எங்களை அழைத்துச் சென்றார்.
உள்ளே அன்று அவளோடு பார்த்த அன்று அந்த ஆண் , கையில் புகையோடு ஆக்ரோஷமாக அமர்ந்திருந்தான். வீடே ஒரு மரண பீதியில் இருந்தது. இதையெல்லம் பார்த்த எனக்கோ இதயம் நூறை தாண்டி படபடத்தது.
என் நண்பரை பார்த்ததும், “இவன் தான்,இவன் கூட தான் இவள் இன்னும் தொடர்பில் இருக்கா...” என்று கூறி,தன் மனைவியை பார்த்தான். உள் அறையில், ஏறக்குறைய ஒரு பிணம் போல் கிடத்தி வைக்கப்பட்டிருந்தாள் அந்த பெண்.
தன் மகளின் வாழ்க்கைக்காக அந்த அம்மா, அவனை கெஞ்சிக் கொண்டிருந்தார்.அந்த அம்மாவின் அழுகையில் இடையிடயே வந்து விழுந்த சொற்களில் இருந்து ,அந்த பெண் , மாசமாய் இருந்ததும், நேற்று அந்த சிசு மரித்ததும் எனக்குப் புரிந்தது.அந்த பெண் என் நண்பரின் முன்னால் காதலி என்பதும் எனக்கு தெளிவானது.
அந்த கணவன்,”ஹைதராபாத்- இருந்து ரிஸல்ட் வரட்டும். அதுக்கு பின்ணாடி உங்க பெண்ணோட வாழலமா வேண்டாமானு முடிவு எடுக்கரேன்...” என்று அவளது தாயிடம் கத்தினான்.
அவன் இறந்த அந்த சிசுவை genetic Test இற்காக அனுப்பியிருந்தான்.
மொத்த கூட்டமும் , என் நண்பரை கரித்துக்கொட்டிக் கொண்டிருந்தது.
அந்த பெண்னின் தந்தை ,அவளது தலை முடியை பற்றி சுவற்றில் முட்டி அவளை, பதிய முடியாத வார்த்தைகளாள் திட்டிக்கொண்டிருந்தார். என் நண்பரின் தாயார்,” எனக்கு சம்பந்தம் இல்லைனு சொல்லு டா... “ என்று கத்தினார். அவரது தந்தை தன் மானம் என்னும் ஒரு விஷயம் தெருவில் ஓடிவிட்டது என்று கதறினார்.
அந்த கணவன், முடிந்த அளவு , கெட்ட வார்த்தைகளை தேடி என் நண்பரையும் அவளையும் திட்டிக் கொண்டிருந்தான். என் நண்பருக்கும் , இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்ற போதிலும், அமைதியாக இருந்தார். அந்த மொத்த இடமும் ஒரு கலவர பூமியாய் இருந்ததது.
டம்ப்ளர் விழும் சத்தம் கேட்டு ,நான் நிமிர்ந்த போது,அவள் நடக்கத் தெரியா குழந்தை போல என் நண்பரின் அருகில் வந்து, அவரது கையை பிடித்துஎன்ன உன் கூடவே கூட்டிட்டு போயிடுறியா ,பிரபா...” என்று தேம்பி அழுதாள்.மறுப்பேதும் சொல்லாமல் அவளை , தூக்கி கொண்டு காருக்கு வந்துவிட்டார்.அந்த காதலின் தூய்மையை உணர்ந்தவர் அங்கு வெகு சிலரே.
 அத்ற்கு பின்பு முறையாக அவளை மணம்முடித்து(விவாகரத்துக்குப் பிறகு) இன்று, ஜாதி சண்டைகள் இல்லாத ஒரு நாட்டில் நல்லபடியாக வாழ்ந்தாலும், அவளது  இழப்புகள் ஏராளம்.
பெற்ற தாய் முதல் ,ஏதுமறியா சிசு வரை எல்லரையும் இழந்துவிட்டாள்.
ஆண்களுக்கும் இழப்புகள் உண்டு , அனால் பெண்களைப் போல் சமூகம் சார்ந்த இழப்புகள் மிகக் குறைவே.தோற்ற காதலுக்கு மட்டுமல்ல ,திருமணத்தில் முடிந்த காதலுக்கும் இது சாலப் பொருந்தும்.
ஒரு சிறு காட்சி...
ஒரு மாலை  நேரம் , மெல்லிய சாரல் பொழுதில், ஒரு பூங்காவின் புள் தரையில் ஒரு இளைஞன் கண்களில் கண்ணீரோடு அமர்ந்திருக்கிறான். ஒரு யுவதி வருகிறாள்,திருமண அழைப்பு ஒன்றை நீட்டி அவனிடம் கொடுத்து  விட்டு அங்கிருந்து அவளும் கண்ணீரோடு நகர்கிறாள்.பின் அவளது தோழி வருகிறாள், அவன் அவளைக் கண்டதும் அழுகையை அடக்க முயல்கிறான் , எல்லாம் தெரிந்த அவள் அவனுக்கு அறுதல் அளிக்கும் விதமாய் அவன் கைகளை பற்றி கொள்கிறாள்.
இதே நிகழ்வை ஆணை பெண்ணாகவும் , பெண்ணை ஆணாகவும் மாற்றி யோசித்து பாருங்கள்; உங்கள்  மனம் என்ன சத்தத்தை ஒலிக்கிறதோ, அதுவே ,உங்களுக்கான இந்த சமூகத்தின் குரல்.
கேள்விகளை உங்கள் முன் வைத்து விட்டேன், பதில்களை என்னிடம் சொல்லாதீர்கள்.”